கடல் சீற்றத்தால் ராட்சத அலைகள் குளச்சல் துறைமுக பாலத்தின் 20 அடி உயர தூண்கள் சாய்ந்தன
குளச்சல்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் ராட்சத அலைகள் எழுந்து பல்வேறு இடங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்து உள்ளது. கடல் சீற்றம் காரணமாக கட்டுமரம், வள்ளங்களை மீனவர்கள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.குளச்சல் கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகரித்து ராட்சத அலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. நேற்று காலை குளச்சல் வர்த்தக துறைமுகத்தில் அமைக்கப்பட்ட பாலத்தின் மேல்மட்டம் வரை ராட்சத அலை சுழற்றி அடித்தது. தொடர்ந்து பலமாக மோதிய அலையினால் பாலத்தின் 20 அடி உயர 2 தூண்கள் கடலுக்குள் விழுந்தன. இதில் பாலத்தின் மேல் நிறுவப்பட்டிருந்த கடல்நீர் மட்டத்தை அளவிடும் கருவியும் கடலுக்குள் விழுந்தது. இதையடுத்து பொதுமக்கள் பாலத்தின்மேல் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
வழக்கமாக குளச்சல் வரும் பொதுமக்கள் கடலின் அழகை பாலத்தின் மீது ஏறி நின்று ரசிப்பது வழக்கம். தற்போது பால தூண் உடைந்ததால் நுழைவு வாயில் பகுதியில் சிவப்பு கொடி கட்டி தடை ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதேபோல் மண்டைக்காட்டிலும், கடற்கரையில் பக்தர்கள் கால் நனைக்க வசதியாக போடப்பட்டிருந்த சப்பாத்து பாலத்தின் நடுவில் கடல் சீற்றம் காரணமாக பள்ளம் விழுந்து இரண்டாக உடைந்தது. நித்திரவிளை அருகேயுள்ள இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடிகாலனி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கடந்த 2 தினங்களாக அலை சீற்றம் அதிகமாக உள்ளது. இதில் 18 பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளது.
source :http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=65168